உலகத்தமிழ் ஆய்வு மாநாடு 2026
Thiruvalluvar statue

ஆய்வுக்குழு குழு

உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டை வழிநடத்தும் ஆய்வாளர்கள்.

முனைவர் நல்லூர் சா. சரவணன்

முனைவர் நல்லூர் சா. சரவணன்

தலைவர்

பேராசிரியர் மற்றும் தலைவர், சைவ சித்தாந்தத் துறை மற்றும் தத்துவத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

பேராசிரியர் டாக்டர் ஈ.ஏ. செல்வனாதன்

பேராசிரியர் டாக்டர் ஈ.ஏ. செல்வனாதன்

துணைத் தலைவர்

பேராசிரியர், கணக்கியல், நிதி மற்றும் பொருளியல் துறை, கிரிஃபித் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா

அருட்தந்தை முனைவர் ஜோசப் சந்திரகாந்தன்

அருட்தந்தை முனைவர் ஜோசப் சந்திரகாந்தன்

துணைத் தலைவர்

ஜோசப் சந்திரகாந்தன் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் (PhD), ஒட்டாவாவில் உள்ள புனித பால் பல்கலைக்கழகத்தில் இறையியல் முனைவர் பட்டத்தையும் (ThD) பெற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பதினேழு ஆண்டுகள் கற்பித்ததுடன், அங்குள்ள கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறையின் இணைப் பேராசிரியராகவும், அத்துறையின் நிறுவனத் தலைவராகவும் பணியாற்றினார். 1996-இல் கனடா திரும்பிய இவர், மாண்ட்ரியலில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் இறையியல் மற்றும் அறவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1999-இல், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மத ஆய்வுகள் துறையில் இணைப் பேராசிரியராகவும், அதே பல்கலைக்கழகத்தின் கூட்டு உயிரி-அறவியல் மையத்தில் (Joint Centre for Bioethics) மூத்த உயிரி-அறவியல் நிபுணராகவும் (Senior Bioethicist) பொறுப்பேற்றார்.

 

தற்போது இவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் இறையியல் பீடத்தில் இணைப் பேராசிரியராக (Adjunct Professor) உள்ளார். இவரது ஆய்வு மற்றும் வெளியீட்டுத் துறைகளில் மதச் சமூகவியல், தத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவை அடங்கும்; குறிப்பாக, நவீன காலத்திற்கு முந்தைய மற்றும் நவீன காலத்தைச் சேர்ந்த பௌத்த, இந்து மற்றும் சைவத் தமிழ் இலக்கியங்கள் இவரது ஆய்வின் முக்கியப் பகுதிகளாகும். மதம் மற்றும் அறவியல் தொடர்பான பல தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் இவர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்; அத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பொது விரிவுரைகளையும் ஆற்றியுள்ளார்.

பேராசிரியர் முனைவர் சின்னத்தம்பி சந்திரசேகரம்

பேராசிரியர் முனைவர் சின்னத்தம்பி சந்திரசேகரம்

உறுப்பினர்

முழுப் பெயர்: பேராசிரியர் முனைவர் சின்னத்தம்பி சந்திரசேகரம்.

கல்விசார் பதவி: தமிழ்ப் பேராசிரியர். பல்கலைக்கழகக் கல்வி: முனைவர் பட்டம் (Ph.D.) - தமிழ், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்; ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.) - தமிழ், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்; இளங்கலை சிறப்புப் பட்டம் (B.A. Hons.) - தமிழ் (இரண்டாம் வகுப்பு - உயர் பிரிவு), இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்; கல்வியியலில் முதுகலைச் சான்றிதழ் (Postgraduate Diploma in Education), இலங்கை திறந்த பல்கலைக்கழகம். கல்விசார் பணி: தமிழ்ப் பேராசிரியர், தமிழ் கற்கைகள் துறை, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்.

முனைவர் நா. சுப்பிரமணியன்

முனைவர் நா. சுப்பிரமணியன்

உறுப்பினர்

பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன்

இலங்கை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை என்ற ஊரைச் சேர்ந்த ஜெ. நாகராஜ ஐயர் மற்றும் நீலாம்பாள் ஆகியோரின் இளைய புதல்வரான சுப்பிரமணியன் அவர்கள், அவ்வூரின் கலைமகள் வித்தியாலயம் மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைச் சிறப்பு (B.A. Hons) மற்றும் முதுகலை (M.A.) பட்டங்களையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி (Ph.D.) பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் துணை விரிவுரையாளராகப் பணியேற்ற இவர், அதே துறையில் விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர், துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஆகிய நிலைகளில் படிப்படியாக உயர்ந்தார். 2002ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற அவர், பின்னர் தமிழகம் சென்று சில காலம் வாழ்ந்தார். 2005ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து, கனடியக் குடிமகனாக வாழ்ந்து வருகிறார். ஈழத்தின் “கந்தபுராணக் கலாசாரம்” வழிவந்த நா. சுப்பிரமணியன் அவர்கள், இளம்பருவத்திலேயே “புராணப் படனம்” எனப்படும் புராணங்களைப் படித்தல் மற்றும் பொருள் விரித்துரைத்தல் என்ற செயன்முறையின் ஊடாகத் தமிழறிவை ஈட்டிக்கொண்டார். அந்த ஈடுபாட்டினால், தனது பதின்ம வயதிலேயே பரந்த வாசிப்பினூடாக தமிழின் பண்டைய மற்றும் நவீன இலக்கிய, இலக்கணப் பரப்பைப் பொருளுணர்ந்து தரிசித்தவராகவும் விளங்கினார்.

 

இவ்வாறு புராணப் படன மரபினூடாகவும் பரந்த வாசிப்பினூடாகவும் பெற்ற தமிழறிவை, பல்கலைக்கழகக் கல்வியின் ஊடாக மேலும் புடமிட்டு செழுமைப்படுத்திக் கொண்டார். அத்துடன், தமிழகத்தின் தமிழாய்வுச் சூழலுடன் மிக நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து அவ்வுறவைப் பேணியும் வருகிறார். தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளில் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான வெளிநிலைத் தேர்வாளராகவும் (External Examiner) கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயற்பட்டு வருகிறார். இவற்றுடன், கடந்த ஆண்டுமுதல் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறை சார்ந்த முதுகலைப் பட்டப் பாடப்பகுதிகள் சிலவற்றுக்கான விரிவுரைகளையும் இணையவழியாக நிகழ்த்தி வருகிறார். இவ்வாறான கல்விசார் தொடர் இயங்குநிலைகளின் ஊடாக, அவர் தம்மை தமிழியல்சார் ஆய்வாளராகவும் திறனாய்வாளராகவும், இலக்கியம் மற்றும் சமயத் தத்துவத் துறைகள்சார் பேருரையாளராகவும் அனைத்துலக நிலையில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், கனடாவுக்குப் புலம்பெயர்ந்த 2005ஆம் ஆண்டுவரை ஒன்பது நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

 

இவருடைய நூல்களின் தலைப்புகள் மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டுகள் வருமாறு:

  1. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் — 1978, 2009
  2. இந்தியச் சிந்தனை மரபு — 1993, 1996
  3. தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி — 1999
  4. நால்வர் வாழ்வும் வாக்கும் — 2002
  5. கந்தபுராணம்: ஒரு பண்பாட்டுக் களஞ்சியம் — 2002
  6. கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள் — பகுதி 1 — 2005
  7. கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள் — பகுதி 2 — 2005
  8. காலத்தின் குரல் — 2005
  9. திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் — 2005

 

இவற்றுள் “இந்தியச் சிந்தனை மரபு” என்ற நூலை, இவர் தமது துணைவியாரான கலாநிதி கௌசல்யா அவர்களுடன் இணைந்து எழுதியுள்ளார். கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள், ஒரு பண்பாட்டுக் கல்வியாளர் என்ற வகையில், கனடாத் தமிழ்ச் சூழலின் பண்பாட்டு நிறுவனங்கள் பலவற்றுடன் இணைந்து ஊக்கமுடன் செயற்பட்டு வருகிறார். “கனடாத் தமிழ்க் கல்லூரி”யின் உயர்கல்விப் பீடத் தலைவராகத் திகழ்ந்து வரும் அவர், அங்கு இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளை வழிநடத்தி வருகிறார். மேலும், 23-12-2024 முதல் “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் — கனடா” (IATR Canada) என்ற பேரமைப்பின் தலைவராகவும் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். இவை தவிர, “ரொறன்ரோத் தமிழ்ச் சங்கம்”, “சிந்தனைக் களம்” — இசை, நடனம் — மற்றும் “வன்னியியல் ஆய்வு மன்றம்” ஆகிய சமூக, பண்பாட்டு நிறுவனங்கள் சார்ந்தும் இவர் கல்விசார் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

 

இவரை நிறுவக இயக்குநர்களில் ஒருவராகக் கொண்ட “ரொறன்ரோத் தமிழ்ச் சங்கம்”, தமிழியலின் அனைத்துத் துறைகளையும் சார்ந்த உயர்நிலைக் கலந்துரையாடல்களுக்கான உலகளாவிய களமாகத் திகழ்ந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு பெப்ரவரியில் தொடங்கிய இந்நிறுவனம், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் 174 உயர்நிலை ஆய்வரங்குகளை நிகழ்த்தியுள்ளது. அத்துடன், தமிழகத்தின் ஆசியவியல் நிறுவனம் மற்றும் ரொறன்ரோப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, 6வது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டை 2025 செப்டம்பர் 19, 20, 21 ஆகிய திகதிகளில் ரொறன்ரோவில் சிறப்பாக நிகழ்த்தி நிறைவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. “தமிழ் இலக்கியத் திறனாய்வியல்” மற்றும் “தமிழியல் ஆய்வின் ஒட்டுமொத்த இயங்குநிலை” ஆகியன தொடர்பான நுண்ணாய்வுகள் இவரால் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றின் உருவாக்கப் பின்னணிகள் தொடர்பாகவும், தமிழரின் அழகியல் மரபுகள் மற்றும் நவீன திறனாய்வியல் சிந்தனைகள் தொடர்பாகவும் இவர் தொடர்ந்து எழுதியும் உரையாற்றியும் வருகிறார். இப்பொருண்மைகள் சார்ந்த இவரின் எழுத்துகள் ஈழத்தின் “ஞானம்” இதழிலும், கனடாவிலிருந்து வெளிவரும் “தாய்வீடு”, “பதிவுகள்” (Pathivugal.com), “உதயன்” முதலிய இதழ்களிலும், அனைத்துலக நிலையிலான பிற இதழ்களிலும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள், தமது எழுத்து முயற்சிகள், பேருரைகள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் சார்ந்த செயற்பாடுகளுக்காக ஈழத்திலும், தமிழகத்திலும், கனடாவிலும் உயர்நிலைக் கௌரவங்கள் பலவற்றைப் பெற்றுள்ளார்.

 

அவற்றுள் சில வருமாறு:

  1. தங்கப் பதக்கம் — 1968 “பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை” என்ற ஆக்கத்துக்கான முதற்பரிசு — இலங்கைப் பல்கலைக்கழக இந்துமாமன்றம்.
  2. “வித்யாபூஷணம்” விருது — 1978 சமய, தத்துவப் புலமைக்கான கௌரவம் — இலங்கை நல்லை ஆதீனம்.
  3. தம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு — 1985 கலாநிதிப் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிறைவு செய்தவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு.
  4. “திருக்குறள்” விருது — 1992 சென்னை “உலகத் திருக்குறள் உயராய்வு மையம்” திருக்குறள் புலமைக்கு வழங்கிய கௌரவம்.
  5. இலங்கை அரசின் “சாகித்திய மண்டல” விருது — 1993 “இந்தியச் சிந்தனை மரபு” நூலுக்காக வழங்கப்பட்டது.
  6. தமிழ்வளர்ச்சி கழக விருது — தமிழ்நாடு அரசு — 1993 “இந்தியச் சிந்தனை மரபு” நூலுக்காக வழங்கப்பட்டது.
  7. “ஸ்ரீவித்யா பூஷண்” விருது — 2006 சமய, தத்துவப் புலமைக்கான கௌரவம் — கனடா, ரொறன்ரோ மேருபுரம் பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம்.
  8. “தமிழர் தகவல்” விருது — 2007 தமிழ்ப்பணிகளை கௌரவித்து கனடா “தமிழர் தகவல்” இதழ் நிறுவனம் வழங்கியது.
  9. “இலக்கியப் பேரறிஞர்” விருது — 2007 இலக்கியச் சொற்பொழிவுக்கான கௌரவம் — கனடா, ரொறன்ரோ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம்.
  10. “புராணபோதகர்” விருது — 2008 கந்தபுராணப் படனச் சிறப்பைப் பாராட்டி கனடா இந்துசமயப் பேரவையால் வழங்கப்பட்டது.
  11. கனடா இலக்கியத் தோட்ட விருது — 2010 2009ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருது. நூல்: “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” — 2ஆம் பதிப்பு, 2009.
  12. Tamil Mirror Award — 2015 சமூக, பண்பாட்டுப் பங்களிப்புகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கில் கனடா ரொறன்ரோ தமிழ் மிரர் இதழால் வழங்கப்பட்ட கௌரவம்.
  13. “கலாரத்னா” — 2017 சமூக, பண்பாட்டுப் பங்களிப்புகளுக்காக கனடா இந்து குருமார் ஒன்றியத்தால் வழங்கப்பட்ட கௌரவம்.
  14. “உதயன்” விருது — 2018 சமூக, பண்பாட்டுப் பங்களிப்புகளுக்காக கனடா “உதயன்” இதழால் வழங்கப்பட்ட கௌரவம்.
  15. வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் பின்வரும் ஐந்து நிறுவனங்களால் வழங்கப்பட்டவை:
    • ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை — 2019
    • கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் — 2023
    • கனடாத் தமிழ்ச் சங்கம் — 2024
    • வென்மேரி அறக்கட்டளை — 2024
    • கனடாத் தமிழ்க் கல்லூரி — 2025

 

மேற்சுட்டியவாறு சமூக கௌரவங்களைப் பெற்றுவரும் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள், 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நூல்வடிவம் பெறாத எழுத்தாக்கங்கள் பலவற்றையும் பொருத்தமான முறையில் தொகுத்து நூல்களாக வடிவமைக்கும் முயற்சியில் அண்மைக்காலமாக தனிக்கவனம் செலுத்தி வருகிறார். பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களின் கல்விசார் ஆளுமைக்கும், சமூக மற்றும் பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கும் உந்துசக்தியாகத் திகழ்ந்து வருபவர், அவருடைய வாழ்க்கைத் துணையாகவும் ஆய்வுத் துணையாகவும் விளங்கும் கலாநிதி திருமதி கௌசல்யா அவர்களாவார். இசையியல், நாடக-அரங்கியல் மற்றும் இதழியல்-மக்கள் தொடர்பியல் ஆகிய துறைகளில் புலமையை வளர்த்துக் கொண்டுள்ள கலாநிதி கௌசல்யா அவர்கள், குடும்ப நிர்வாகத்தையும் ஆராய்ச்சியையும் இரு கண்களாகக் கருதுபவர்.

 

இசைத்துறையில் கலாநிதிப் பட்டம் (Ph.D.) பெற்றுள்ள இவர், கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களின் “ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள்” பகுதி 1, பகுதி 2 மற்றும் “காலத்தின் குரல்” ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவருடைய கலாநிதிப் பட்ட ஆய்வேடான “தமிழில் இசைப்பாடல் வகைகள் — அறிவனாரின் பஞ்சமரபு நூலை மையப்படுத்திய ஒரு நுண்ணாய்வு” என்ற ஆக்கம் 2017ஆம் ஆண்டில் நூல்வடிவம் பெற்றுள்ளது. தொடர்ந்து இவர் எழுதிய இசைசார் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான “இசைத்தமிழ்ச் சிந்தனைகள்” என்ற நூலும் அதே ஆண்டில் வெளியிடப்பட்டது. தற்போது, 2020 டிசம்பர் முதல், இவர் “சிந்தனைக் களம்” என்ற இணையவழி அமைப்பை நிறுவி, அதன் ஊடாக இசை மற்றும் நடனம் ஆகிய துறைகள் சார்ந்து உலகளாவிய உயர்நிலைக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறார்.

முனைவர் அ. சண்முகதாஸ்

முனைவர் அ. சண்முகதாஸ்

உறுப்பினர்

தகைசால் பேராசிரியர் முனைவர் அருணாசலம் சண்முகதாஸ் இலங்கையில் திருகோணமலையில் 02.01.1940இல் பிறந்தவர். 1963இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஸ்கொட்லாந்து எடின்பரோப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் 1972இல் பெற்றவர். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் துணைக்குழுக்களில் அங்கம் வகித்தவர். தற்போது தகைசால் தமிழ்ப் பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்துள்ளார். இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிபுணத்துவ மதியுரைப் பேராசிரியராக 2009இல் இருந்துள்ளார். ஜப்பான் கக்சுயின் பல்கலைக்கழகத்திலும், நைஜீரியா இபாதன் பல்கலைக்கழகத்திலும் மொழியியல் கற்பிப்பதற்கு விருந்துநிலைப் பேராசிரியராக இருந்தார். 2005 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் டென்மார்க், நோர்வே நாடுகளும் இணைந்து நடத்திய ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.

 

யுனெஸ்கோ வழங்கிய புலமைப் பரிசிலில் இந்தியாவில் புதுடெல்லி, பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார், சென்னைப் பல்கலைக்கழகங்களின் ஊடகத் துறைகளுக்கும் டென்மார்க் ஆர்கோஸ் ஊடகக் கல்லூரிக்கும் சென்று வந்தார். 40க்கு மேற்பட்ட நூல்களையும் 200க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்க இலக்கியமாகிய குறுந்தொகையினை சென்னை செம்மொழி மையத்தின் பணிப்பில் முனைவர் ச. மனோன்மணி, திரு. விமல் சாமிநாதன் ஆகியோருடன் சேர்ந்து சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இலங்கை அரசு இவருக்கு “சாகித்திய ரத்னா” விருதினை 2008இல் வழங்கியது. திருக்குறள் பெரு விழாவைச் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க மதியுரை வழங்கியமைக்காக “அதிமேதகு ஜனாதிபதி விருது” 30.08.2019இல் வழங்கப்பட்டது. 1920இல் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இவருக்கு “தமிழ் இலக்கண விருது” வழங்கிச் சிறப்பித்தது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றித் தற்போது அதன் பெருந்தலைவராகவுள்ளார். 2019 தொடக்கம் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர்களுள் ஒருவராகப் பணிசெய்துவருகிறார்.

திருமதி விஜிதா திவாகரன்

திருமதி விஜிதா திவாகரன்

உறுப்பினர்

திருமதி விஜிதா திவாகரன், துறைத்தலைவர் தமிழ் கற்கைகள் துறை கலை கலாசார பீடம் , கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

முனைவர் இரா. சீனிவாசன்

முனைவர் இரா. சீனிவாசன்

உறுப்பினர்

முனைவர் ஆர். சீனிவாசன் (1963-), தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் "மத்திய-மாநில உறவுகள் மீதான உயர்நிலைக் குழுவின்" 'செயலாளர் மற்றும் ஆராய்ச்சி அலுவலராக' ஜூன் 2025-ல் அப்பதவியை ஏற்றார்.

 

தற்போதைய பதவிக்கு முன்பு, அவர் ஜூன் 2021 முதல் மே 2025 வரை மாநிலத் திட்டக் குழுவில் முழுநேர உறுப்பினராகப் பணியாற்றினார். இதற்கு முன்னர், 2006 முதல் 2011 வரை முழுநேர மற்றும் பகுதிநேரப் பொறுப்புகளில் அக்குழுவில் பணியாற்றியுள்ளார்.

 

அவரது கொள்கை நிபுணத்துவம், கல்வி மற்றும் நிதி மதிப்பீட்டுடன் அடிக்கடி தொடர்புபடுகிறது. சமீபத்தில், அவர் தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிதிகளை மதிப்பீடு செய்வதற்கான குழுவிற்குத் தலைமை தாங்கினார் மற்றும் மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

 

தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், 2002-2003-ல் மாநிலத்தின் வரி சீர்திருத்தம் மற்றும் வருவாய் பெருக்க ஆணையத்தில் ஒரு பொருளாதார நிபுணராகவும் தனது நிபுணத்துவத்தை வழங்கினார்.

 

“இந்தியாவில் ஒன்றிய நிதிப் பரிமாற்றங்களும் கிடைமட்ட சமத்துவமும்” என்ற அவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கை, நிதிக் கூட்டாட்சி மீதான அவரது வாழ்நாள் கவனத்திற்கான கல்விசார் அடித்தளத்தை அமைத்தது.

 

அவர் 1988-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளில் பொருளியல் விரிவுரையாளராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கினார். பின்னர், சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளியல் அளவியல் துறையில் முதுகலை பயன்பாட்டுப் பொருளியலைக் கற்பித்து, 2008 முதல் 2014 வரை இணைப் பேராசிரியராகவும், 2014 முதல் 2021 வரை பேராசிரியராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.

 

அக்டோபர் 2017 முதல் அக்டோபர் 2020 வரை பல்கலைக்கழகப் பதிவாளர் என்ற முக்கிய நிர்வாகப் பொறுப்பையும் அவர் வகித்தார்.

 

ஆர். சீனிவாசன், சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்கள், கல்விசார் நூல்கள் மற்றும் முக்கிய செய்தித்தாள்களில் தீவிரமாகக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். அவரது கல்விசார் பணிகள் பெரும்பாலும் நிதிக் கூட்டாட்சி, பன்முக வறுமை, மாநில அளவிலான பொருளாதார இயக்கவியல் மற்றும் மதிப்புக்கூட்டு வரி (VAT), சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற வரிவிதிப்பு முறைகளின் தாக்கங்கள் ஆகியவற்றை ஆராய்கின்றன.

 

கல்வித்துறைக்கு அப்பால், அவர் தி ஹிந்து, ஃபிரன்ட்லைன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ஹிந்து பிசினஸ் லைன் உள்ளிட்ட முக்கிய ஆங்கில நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் அடிக்கடி கருத்துரைகளை எழுதி வருகிறார்.

 

இந்தத் தளங்கள் மூலம், மாநிலத் தேர்தல் நிலவரங்கள், மத்திய-மாநில நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தம் போன்ற அவசரமான சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளை அவர் பகுப்பாய்வு செய்கிறார்.

 

மேலும், தி ஹிந்து (தமிழ்) மற்றும் நாணய விகடன் போன்ற தமிழ் வெளியீடுகளுக்காக 100-க்கும் மேற்பட்ட பத்திகளையும் அவர் எழுதியுள்ளார்.

பேராசிரியர் போல் ரொகான்

பேராசிரியர் போல் ரொகான்

உறுப்பினர்

பேராசிரியர் அருட்தந்தை J.C. போல் றொகான் இலங்கை, யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த உரோமன் கத்தோலிக்க குரு ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவக் கற்கைகளில் பேராசிரியர் நிலையில் உள்ளதுடன், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறையின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.

 

கிறிஸ்தவ மெய்யியல் மற்றும் இறையியல் தளங்களில் குறிப்பிடத்தக்க பல ஆய்வு நூல்களை ஆக்கியும் தொகுத்தும் வெளியிட்டுள்ள இவரது ஆக்கங்கள், சர்வதேச மட்டத்திலான கல்விசார் ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன. இவரது புலமைத்துவப் பங்களிப்புகள் குறிப்பாக, நம்பிக்கை, அறவியல், மொழி மற்றும் கலாசார ஈடுபாடுகள் ஆகியவற்றிற்கு இடையிலான நுணுக்கமான இடைவினைகளையும் தொடர்புகளையும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதனை இலக்காகக் கொண்டுள்ளன.

பேராசிரியர் கி. விசாகரூபன்

பேராசிரியர் கி. விசாகரூபன்

உறுப்பினர்

  1. தமிழில் பி.ஏ (ஆனர்ஸ்) முதல் வகுப்பில் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். (1987-1992)
  2. தமிழில் எம்.ஃபில் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். (1997)
  3. இரண்டாம் வகுப்பு உயர் பிரிவில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் முதுகலைப் பட்டயம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா. (2001)
  4. முதல் வகுப்பில் கோயில் கலை முதுகலைப் பட்டயம், கரக்குடி அழகப்ப பல்கலைக்கழகம், கரக்குடி, தமிழ்நாடு, இந்தியா. (2002)
  5. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா. (2002) பணிப்பாதை
  6. தமிழ் மூத்த பேராசிரியர் – 24.09.2017 முதல் இன்று வரை
  7. பேராசிரியர் – 24.09.2009
  8. மூத்த விரிவுரையாளர் நிலை – I – 2005
  9. மூத்த விரிவுரையாளர் நிலை – II – 1999
  10. விரிவுரையாளர் – 1994
  11. உதவி விரிவுரையாளர் – 1993

 

பதவிகள்

தமிழ் சிரேஷ்டப் பேராசிரியர் – 24.09.2017 முதல் இன்று வரை

முதுகலைப் பட்டப் படிப்புகள்/பட்டயப் படிப்புகளுக்கான வள நபர்

  1. தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் முதுகலை நிறுவனம், பேராதெனியப் பல்கலைக்கழகம், பேராதெனிய
  2. தமிழ் முதுகலைப் பட்டயப் படிப்பு - மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் முதுகலை நிறுவனம், பேராதெனியப் பல்கலைக்கழகம், பேராதெனிய
  3. தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - தமிழ் திணைக்களம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்
  4. தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு - பட்டதாரிப் படிப்புத் திணைக்களம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்
  5. கலை முதுகலைப் பட்டப் படிப்பு - பட்டதாரிப் படிப்புத் திணைக்களம், யாழ்ப்பாணம்
  6. ஊடகவியல் உயர் பட்டயப் படிப்பு - ஊடகவியல் திணைக்களம், கலைத் திணைக்களம், யாழ்ப்பாணம்
  7. எம்.ஃபில், பிஎச்.டி மாணவர்களின் ஆய்வு முறையியல் விரிவுரைக்கான வள நபர் (கலாச்சார ஆய்வுகளுக்கு), பட்டதாரிப் படிப்புத் திணைக்களம், யாழ்ப்பாணம்
  8. கல்வியியல் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான திணைக்களம் பட்டதாரி கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்
  9. ஓர் இதழியல் பட்டயம், ஊடக வளப் பயிற்சி மையம், கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வகித்த நிர்வாகப் பதவிகள்

  1. தமிழ்த்துறைத் தலைவர் (2010-2016)
  2. பதினோரு பீடாதிபதி, கலைத்துறை
  3. மாணவர் ஆலோசகர், கலைத்துறை
  4. உப காப்பாளர் (பகுதிநேரம்)
  5. பாடநெறி ஒருங்கிணைப்பாளர், தமிழ் முதுகலை பட்டப்படிப்பு
  6. புறக்கல்வி ஒருங்கிணைப்பாளர்
  7. ஊடகவியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர், கலைத்துறை
  8. ஊடக வளப் பயிற்சி மையம் ஒருங்கிணைப்பாளர், கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
Dr. பாலசுந்தரம் இளையதம்பி

Dr. பாலசுந்தரம் இளையதம்பி

உறுப்பினர்

பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி 1969-ஆம் ஆண்டில் பேராதெனியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, 1977-ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பேராதெனிய, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் கனடாவின் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து கற்பித்து வருகிறார். தற்போது அவர், திருநாடு, கனடாவின் அண்ணாமலையில் உள்ள தெற்காசிய நுண்கலைக் கழகத்தின் தொலைக்கல்வித் திட்டத்தில் தமிழ் ஆய்வுத் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

பேராசிரியர் இளையதம்பி, காமன்வெல்த் சிரேஷ்ட ஆய்வு உதவித்தொகையையும், இந்தியா, இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து பல கல்வி உதவித்தொகைகளையும் பெற்றுள்ளார்.

அவர் தமிழ் செவ்வியல் இலக்கியம், நாட்டுப்புறவியல் மற்றும் தமிழ் பண்பாடு குறித்து 23 ஆய்வு நூல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் கல்விசார் இதழ்களிலும் சமூக இதழ்களிலும் வெளியிட்டுள்ளார். அவர் தமிழ்நாடு அரசிடமிருந்து இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்: “தமிழ்ப் பண்பாடு ஒரு புதிய அணுகுமுறை” என்ற நூல் 2015-ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வு நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது; “தமிழ் நாட்டுப்புறவியல் புதையல்” என்ற நூல், புலம்பெயர் தமிழர்களிடையே 2021-ஆம் ஆண்டின் சிறந்த இலக்கிய அறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கனடா இலக்கியத் தோட்டம், 2017-ஆம் ஆண்டிற்கான “கனடாவில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் – வரலாற்றின் ஓர் ஆவணம்” என்ற நூலுக்கு விருது வழங்கியது.

பேராசிரியர் இளையதம்பி, மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுகள் துறையின் ‘செம்மொழித் தமிழ்’ மற்றும் ‘தமிழ்ப் பேருவு’ ஆகிய கல்விசார் இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் ஓர் உறுப்பினராக உள்ளார். பேராசிரியர் இளையதம்பி பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்: IATR, IMTC, FeTNA, உலகத் திருக்குறள் மாநாடுகள், உலக நாட்டுப்புற நாடக மாநாடு, உலகத் தொல்காப்பிய மாநாடு, நான்காவது ஐரோப்பியத் தமிழ் பாரிஸ் மாநாடு ஆகியவை அவற்றில் சிலவாகும். அவர் சென்னை, அண்ணாமலை, மதுரை, பதியாசன் மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் டி.லிட். மற்றும் பிஎச்.டி. ஆய்வுக்கட்டுரைகளுக்கான வெளி மதிப்பீட்டாளராகவும் உள்ளார்.

பேராசிரியர் இளையதம்பி அவர்கள் ஒன்ராறியோ அரசாங்கம், சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் ஊடகங்களிடமிருந்து சமூக மற்றும் கலாச்சார சிறந்த சேவை விருதுகளையும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் கனடாவில் உள்ள சமூக, கலாச்சார மற்றும் கல்விச் சங்கங்களில் நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்.

அபினா நிமல்ராஜ்

அபினா நிமல்ராஜ்

ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்

அபினா நிமல்ராஜ், அமைதி மற்றும் மோதல் ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும், அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். அவர் தற்போது இலாப நோக்கற்ற துறையில் பணிபுரிந்து, சமூகத் தாக்கத்தை மையமாகக் கொண்ட சமூக முன்னெடுப்புகள் மற்றும் கூட்டாண்மைகளுக்கு ஆதரவளித்து வருகிறார்.

அவரது கல்வி மற்றும் தொழில்முறை ஆர்வங்களில், இடைக்கால நீதி, மனித உரிமைகள், அமைதி ஏற்படுத்துதல், மற்றும் மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் ஆகியவை அடங்கும்; குறிப்பாக ஈழத் தமிழ் போராட்டத்தில் அவர் கவனம் செலுத்துகிறார். நீதிக்கு பங்களிக்கும், வரலாற்று நினைவுகளைப் பாதுகாக்கும், மற்றும் உலகளாவிய தமிழ் சமூகத்திற்குள் அர்த்தமுள்ள உரையாடலை ஊக்குவிக்கும் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் உறுப்பினராக, அபினா தமிழ் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறார். அதே நேரத்தில் கல்வித்திறன், சமூக ஈடுபாடு மற்றும் கலாச்சாரத் தொடர்ச்சியை வலுப்படுத்தும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கிறார். தனது தொழில்முறைப் பணிகளுக்கு அப்பால், அவர் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பரதநாட்டியம் பயின்றுள்ளார். மேலும் தமிழ் கலாச்சாரம் மற்றும் சமூகத் தாக்கத்தை ஊக்குவிக்கும் சமூக முன்னெடுப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.