அனைத்துலகத் தமிழர் மாநாட்டுக்கு 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன!

“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்”
உலகத் தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்த அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026. 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைப்பு!
“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்”
அனைத்துலகத் தமிழர் மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் 497 ஆய்வுச் சுருக்கங்கள்!
அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பின் கீழ் அனைத்துலகத் தமிழர் மாநாடு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடாவின் டொரொன்டோ மாநகரில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு முன்னிட்டு 5 தலைப்புகளின் கீழ் உலகம் முழுவதுமுள்ள தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுச் கட்டுரைகள் கோரப்பட்டிருந்தன. அதற்கான ஆய்வுச் சுருக்கங்களை கடந்த மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உலகிலுள்ள பல நாடுகளிலிருந்தும் மொத்தமாக 497 ஆய்வுச் சுருக்கங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து அதிகளவிலான ஆய்வுச் சுருக்கங்கள் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றுள் “மெய்ப்பொருளியலும் பண்பாடும்” மற்றும் “தமிழர் வரலாறும் வாழ்வியலும்” ஆகிய தலைப்புகளின் கீழ் அதிக எண்ணிக்கையிலான ஆய்வுச் சுருக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் “தமிழும் செய்யறிவும்”, “பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும்”, “இலங்கை வடகிழக்குப் பொருண்மைய மேம்பாடு” ஆகிய தலைப்புகளின் கீழும் குறிப்பிடத்தக்க அளவில் ஆய்வுச் சுருக்கங்கள் கிடைத்துள்ளன.
மாநாட்டில் பங்கேற்கும் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களை உள்ளடக்கிய ஐந்து தலைப்புகளுக்குமான வல்லுநர் குழுக்கள் மைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் பரிந்துரைக்கும் தேர்வுசெய்யப்பட்ட ஆய்வாளர்களுக்கு ஆய்வுச் சுருக்கத் தேர்வு பற்றி எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் அனுப்பிவைக்கப்படும்.
இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கு பல நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மாநாட்டிற்காக தங்களது ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பியுள்ள உலகத் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவருக்கும் அனைத்துலகத் தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இங்ஙனம்,
நல்லூர் சா. சரவணன்
சென்னைப் பல்கலைக்கழகச் சைவ சித்தாந்தத் துறைப் பேராசிரியர்
ஆய்வரங்கக் குழுத் தலைவர்
அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026