Dr. N. Subramanian
Committee Members
பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன்
[சுருக்கமான அறிமுகக் குறிப்பு]
இலங்கை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை என்ற ஊரைச் சேர்ந்த ஜெ. நாகராஜ ஐயர் மற்றும் நீலாம்பாள் ஆகியோரின் இளைய புதல்வரான சுப்பிரமணியன் அவர்கள், அவ்வூரின் கலைமகள் வித்தியாலயம் மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைச் சிறப்பு (B.A. Hons) மற்றும் முதுகலை (M.A.) பட்டங்களையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி (Ph.D.) பட்டத்தையும் பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் துணை விரிவுரையாளராகப் பணியேற்ற இவர், அதே துறையில் விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர், துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஆகிய நிலைகளில் படிப்படியாக உயர்ந்தார். 2002ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற அவர், பின்னர் தமிழகம் சென்று சில காலம் வாழ்ந்தார். 2005ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து, கனடியக் குடிமகனாக வாழ்ந்து வருகிறார்.
ஈழத்தின் “கந்தபுராணக் கலாசாரம்” வழிவந்த நா. சுப்பிரமணியன் அவர்கள், இளம்பருவத்திலேயே “புராணப் படனம்” எனப்படும் புராணங்களைப் படித்தல் மற்றும் பொருள் விரித்துரைத்தல் என்ற செயன்முறையின் ஊடாகத் தமிழறிவை ஈட்டிக்கொண்டார். அந்த ஈடுபாட்டினால், தனது பதின்ம வயதிலேயே பரந்த வாசிப்பினூடாக தமிழின் பண்டைய மற்றும் நவீன இலக்கிய, இலக்கணப் பரப்பைப் பொருளுணர்ந்து தரிசித்தவராகவும் விளங்கினார்.
இவ்வாறு புராணப் படன மரபினூடாகவும் பரந்த வாசிப்பினூடாகவும் பெற்ற தமிழறிவை, பல்கலைக்கழகக் கல்வியின் ஊடாக மேலும் புடமிட்டு செழுமைப்படுத்திக் கொண்டார். அத்துடன், தமிழகத்தின் தமிழாய்வுச் சூழலுடன் மிக நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து அவ்வுறவைப் பேணியும் வருகிறார். தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகளில் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான வெளிநிலைத் தேர்வாளராகவும் (External Examiner) கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயற்பட்டு வருகிறார்.
இவற்றுடன், கடந்த ஆண்டுமுதல் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறை சார்ந்த முதுகலைப் பட்டப் பாடப்பகுதிகள் சிலவற்றுக்கான விரிவுரைகளையும் இணையவழியாக நிகழ்த்தி வருகிறார்.
இவ்வாறான கல்விசார் தொடர் இயங்குநிலைகளின் ஊடாக, அவர் தம்மை தமிழியல்சார் ஆய்வாளராகவும் திறனாய்வாளராகவும், இலக்கியம் மற்றும் சமயத் தத்துவத் துறைகள்சார் பேருரையாளராகவும் அனைத்துலக நிலையில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், கனடாவுக்குப் புலம்பெயர்ந்த 2005ஆம் ஆண்டுவரை ஒன்பது நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவருடைய நூல்களின் தலைப்புகள் மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டுகள் வருமாறு:
- ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் — 1978, 2009
- இந்தியச் சிந்தனை மரபு — 1993, 1996
- தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி — 1999
- நால்வர் வாழ்வும் வாக்கும் — 2002
- கந்தபுராணம்: ஒரு பண்பாட்டுக் களஞ்சியம் — 2002
- கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள் — பகுதி 1 — 2005
- கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள் — பகுதி 2 — 2005
- காலத்தின் குரல் — 2005
- திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் — 2005
- தங்கப் பதக்கம் — 1968 “பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை” என்ற ஆக்கத்துக்கான முதற்பரிசு — இலங்கைப் பல்கலைக்கழக இந்துமாமன்றம்.
- “வித்யாபூஷணம்” விருது — 1978 சமய, தத்துவப் புலமைக்கான கௌரவம் — இலங்கை நல்லை ஆதீனம்.
- தம்பிமுத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு — 1985 கலாநிதிப் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிறைவு செய்தவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு.
- “திருக்குறள்” விருது — 1992 சென்னை “உலகத் திருக்குறள் உயராய்வு மையம்” திருக்குறள் புலமைக்கு வழங்கிய கௌரவம்.
- இலங்கை அரசின் “சாகித்திய மண்டல” விருது — 1993 “இந்தியச் சிந்தனை மரபு” நூலுக்காக வழங்கப்பட்டது.
- தமிழ்வளர்ச்சி கழக விருது — தமிழ்நாடு அரசு — 1993 “இந்தியச் சிந்தனை மரபு” நூலுக்காக வழங்கப்பட்டது.
- “ஸ்ரீவித்யா பூஷண்” விருது — 2006 சமய, தத்துவப் புலமைக்கான கௌரவம் — கனடா, ரொறன்ரோ மேருபுரம் பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம்.
- “தமிழர் தகவல்” விருது — 2007 தமிழ்ப்பணிகளை கௌரவித்து கனடா “தமிழர் தகவல்” இதழ் நிறுவனம் வழங்கியது.
- “இலக்கியப் பேரறிஞர்” விருது — 2007 இலக்கியச் சொற்பொழிவுக்கான கௌரவம் — கனடா, ரொறன்ரோ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம்.
- “புராணபோதகர்” விருது — 2008 கந்தபுராணப் படனச் சிறப்பைப் பாராட்டி கனடா இந்துசமயப் பேரவையால் வழங்கப்பட்டது.
- கனடா இலக்கியத் தோட்ட விருது — 2010 2009ஆம் ஆண்டின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருது. நூல்: “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” — 2ஆம் பதிப்பு, 2009.
- Tamil Mirror Award — 2015 சமூக, பண்பாட்டுப் பங்களிப்புகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கில் கனடா ரொறன்ரோ தமிழ் மிரர் இதழால் வழங்கப்பட்ட கௌரவம்.
- “கலாரத்னா” — 2017 சமூக, பண்பாட்டுப் பங்களிப்புகளுக்காக கனடா இந்து குருமார் ஒன்றியத்தால் வழங்கப்பட்ட கௌரவம்.
- “உதயன்” விருது — 2018 சமூக, பண்பாட்டுப் பங்களிப்புகளுக்காக கனடா “உதயன்” இதழால் வழங்கப்பட்ட கௌரவம்.
- வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்
பின்வரும் ஐந்து நிறுவனங்களால் வழங்கப்பட்டவை:
- ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை — 2019
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் — 2023
- கனடாத் தமிழ்ச் சங்கம் — 2024
- வென்மேரி அறக்கட்டளை — 2024
- கனடாத் தமிழ்க் கல்லூரி — 2025