கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்புக் கட்டமைப்பு
உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026
உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 ஆனது தமிழ் மொழி, பண்பாடு, மரபு மற்றும் குமுக மேம்பாடு தொடர்பான ஆய்வு, ஒத்துழைப்பு, புதுமை மற்றும் மேம்பாட்டுக்கான ஓர் உலகளாவிய தளமாகும்.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய முயற்சியில் எம்மோடு இணைந்து செயற்படுமாறு உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் குமுக அமைப்புகளை அன்போடு அழைக்கின்றோம்.
எமது கூட்டாண்மையானது பகிரப்பட்ட விழுமியங்கள், இருதரப்பு மரியாதை, எமது நோக்கு, பணி மற்றும் அடிப்படைக் கொள்கைகளின் ஒத்திசைவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைகின்றது.
எமது தொலைநோக்கு (Our Vision)
உலகெங்கும் வாழும் தமிழர் கண்ணியம், சமத்துவம், வாய்ப்பு மற்றும் கூட்டு மேம்பாடு ஆகியவற்றைத் துய்க்கும் எதிர்காலத்தை உருவாக்குதல் ஆகும்.
எமது பணி (Our Mission)
பண்பாட்டுப் பாதுகாப்பு, கல்விசார் மேன்மை, ஆய்வு, புதுமை மற்றும் நிலைத்த மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உலகத் தமிழரை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல்.
அடிப்படைக் கொள்கைகள்
- ஒற்றுமை மற்றும் கூட்டுப் பிரதிநிதித்துவம்
- வன்முறையற்ற மற்றும் மக்களாட்சி விழுமியங்கள்
- பண்பாட்டுப் பாதுகாப்பும் கல்விசார் முன்னேற்றமும்
- மனித உரிமைகள், நீதி மற்றும் ஒப்புரவு
- போட்டியிலும் ஒத்துழைப்புக்கு முன்னுரிமை
கூட்டாண்மை வகைகள்
உத்திசார் கூட்டாளர்கள் (Strategic Partners)
எமது தொலைநோக்கோடும் பணியோடும் நெருக்கமாக இணைந்து, மாநாட்டின் உலகளாவிய விரிவாக்கம், நீண்டகாலத் தாக்கம் மற்றும் எதிர்கால முயற்சிகளை வடிவமைப்பதில் பங்களிக்கும் அமைப்புகள்.
கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்
கல்விசார் தலைமை, ஆய்வு ஒத்துழைப்பு, வெளியீடுகள் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றில் பங்களிக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சிந்தனைக் குழுக்கள், அறிஞர்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள்.
குமுக மற்றும் பண்பாட்டு அமைப்புகள்
தமிழர் அடையாளம், மரபு மற்றும் குமுக ஈடுபாட்டை வலுப்படுத்தும் அடித்தள மக்கள் அமைப்புகள், வருவாய் நோக்கற்ற குழுக்கள், பண்பாட்டு ஒன்றியங்கள், இளைஞர் இயக்கங்கள் மற்றும் குமுக வலையமைப்புகள்.
தொழில் மற்றும் புதுமைக் கூட்டாளர்கள்
தமது சிறப்புத்தேர்ச்சி, தொழிற்தொடர்பு வாய்ப்புகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பின் மூலம் தொழில் மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் பங்களிக்கும் வணிக நிறுவனங்கள், தொழில்முனைவோர், தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் புதுமை நோக்குடைய அமைப்புகள்.
நிதியளிப்பு மற்றும் நல்கைக் கூட்டாளர்கள்
மாநாட்டின் அணுகல் தன்மை, வெளியீடுகள், நிகழ்ச்சித் திட்டங்கள், நல்கை மற்றும் குமுக விரிவாக்க முயற்சிகளுக்கு நிதி, கொடைகள் அல்லது வளங்களை வழங்கும் அமைப்புகள், வணிக நிறுவனங்கள், கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
பங்களிக்கும் வழிகள்
கூட்டாண்மை அமைப்புகள் பின்வரும் வழிகளில் பங்களிக்கலாம்:
- ஆய்வுக் கட்டுரைகள், முதன்மை உரைகள் மற்றும் புலமை அமர்வுகளை வழங்குதல்
- கலந்துரையாடல் அரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் மற்றும் ஏரணங்களை இணைந்து நடத்துதல்
- பண்பாடு, கல்வி மற்றும் இளைஞர் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அளித்தல்
- உலகளாவிய பங்கேற்பை ஊக்குவித்தலும் ஒருங்கிணைத்தலும்
- நிதியுதவி, கொடைகள், கல்வி உதவித்தொகை அல்லது வளங்களை அளித்தல்
- தொழில்நுட்பம், கல்வி, ஊடகம் மற்றும் அமைப்பு ஆதரவை வழங்குதல்
- இம்மாநாட்டைக் கடந்து நீடிக்கும் கூட்டு முயற்சிகளை உருவாக்குதல்
கூட்டாண்மை இணைப்பு நடைமுறைகள்
- விருப்ப வெளிப்பாட்டைத் தெரிவித்தல்
- கூட்டாண்மை ஒத்திசைவு மற்றும் மீளாய்வு
- கூட்டாண்மை உறுதிப்படுத்தல்
- மாநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்
எம்மோடு இணையுங்கள்
தமிழ் அறிவு, பண்பாடு, ஆய்வு, புதுமை மற்றும் மேம்பாட்டுக்கான எமது தொலைநோக்கு, பணி மற்றும் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் அமைப்புகளை இந்த உலகளாவிய இயக்கத்தில் இணையுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
அனைத்துக் கூட்டாண்மைகளும் ஒத்துழைப்புகளும் மாநாட்டு வழிநடத்தல் குழுவின் (Steering Committee) ஒப்புதலுக்கு உட்பட்டவை ஆகும்.
தொடர்பு விவரங்கள்
மின்னஞ்சல்:
communication@tamilfederation.org
தொலைபேசி:
416-473-5348
இணையதளம்:
உலகத் தமிழ் ஆய்வு மாநாடு
மாநாட்டுக் கருப்பொருள்
“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்”
“Classical Tamil and the Tamils in the Era of Artificial Intelligence”
“நன்றின்பால் உய்ப்பது அறிவு”
“உண்மையான அறிவு மனிதனை நன்மையின் வழி நடத்தும்”
